| கோவை: “மாணவர்களை அடிப்பதோ, திட்டுவதோ பின்விளைவுகளை ஏற்படுத்தும். இனி ‘ஸ்டிக் அண்ட் டீச்’ முறை பலனளிக்காது. மாணவர்களை கையாளும் பாணியையும், கற்பிக்கும் முறையையும் ஆசிரியர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அன்புடனும் பரிவுடனும் நடத்த வேண்டும்,” என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி அறிவுறுத்தியுள்ளார். பள்ளி பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அடிக்கடி ‘ரகசிய கூட்டங்கள்’ நடத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) ஆலோசனை வழங்கி வருகிறார். தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதாசனை ஆசிரியர்கள் மத்தியில் பேச செய்து, அவர்களுக்கு ஊக்கம் அளித்தார். ரகசிய தொடர் கூட்டங்களின் ஒரு பகுதியாக, புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி பேசியதாவது: ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. மாணவர்களை அடிப்பதோ, திட்டுவதோ பின்விளைவுகளை ஏற்படுத்தும். இன்றைய சட்டங்கள் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சாதகமாக உள்ளது. ‘ஸ்டிக் அண்ட் டீச்’ முறை பலன் அளிக்காது. மாணவர்களை கையாளும் பாணியை ஆசிரியர்கள் மாற்றிக் கொண்டு, அன்புடனும் பரிவுடனும் நடத்த வேண்டும். அவர்களுக்கு உடலளவிலோ, மனதளவிலோ பாதிப்பு ஏற்படாமல் பக்குவமாக கற்பிக்க வேண்டும். அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, அனைத்து மாணவர்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டியது அவசியம். மாணவர்களுக்கு ஏற்படும் எந்த வடிவிலான பாதிப்பும், இந்த சட்டத்தின் நோக்கத்தை சீர்குலைத்து விடும். அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தை மனதில் வைத்து ஆசிரியர்கள் கற்பிப்பது சமுதாயத்துக்கு நன்மை செய்யும். சில மாணவர்கள் படிப்பில் பின்தங்க, சரியாக வகுப்புக்கு வராததே காரணம். சில மாணவர்கள் நன்கு படிப்பவர்களாக இருந்தாலும் வீட்டுச் சூழல் காரணமாக பள்ளிக்கு ஒழுங்காக வர முடியாத நிலை இருக்கலாம். ஒரு வாரம் படித்தாலே தேர்ச்சி பெற்று விடும் திறன் பெற்றவர்களாக இதுபோன்ற மாணவர்கள் இருப்பர். அதிக நாட்களாக வகுப்புக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் வீட்டுக்கே சென்று, விடுப்புக்கான காரணத்தை அறிந்து, தீர்வு காண உதவ வேண்டும். இவ்வாறு, முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி பேசினார். பொள்ளாச்சி கல்வி அலுவலர் அகமது பேசுகையில், “மாணவர் தான் நமது சொத்து. ஆசிரியர்களின் குடும்பமும், வாரிசுகளும் வாழ, மாணவர்கள் காரணம். பள்ளியில் போதுமான கவனிப்பு கிடைக்காத மாணவன், எதிர்காலத்தில் பாதை மாறி சமூக விரோதியாகும் வாய்ப்பு உள்ளது. அவர்களை கைவிட்டு விடக்கூடாது. “எப்பாடு பட்டாவது அவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் சமுதாய கண்ணோட்டத்துடன் பணிபுரிய வேண்டும்,” என்றார். கோவை மாவட்ட கல்வி அலுவலர் முருகன் உட்பட ஏராளமான தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த விடுமுறையில் வகுப்புகள்: கூட்டத்தில் சி.இ.ஓ., ஆனந்தி பேசுகையில், “நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொது தேர்வுகளில் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் பொறுமை, அக்கறையுடன் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் நலன் கருதி, அரையாண்டு தேர்வு விடுமுறையில் பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முழு நேரம் வகுப்புகள் நடத்த வேண்டும். பொதுத் தேர்வுகளில் கோவை மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பிடிக்க ஒவ்வொரு ஆசிரியரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட வேண்டும்,” என்றார். |
You Might Also Like :





0 கருத்துகள்:
கருத்துரையிடுக